ரஜினி-கமலுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன்- நடிகர் பிரபு

தேர்தல் நேரத்தில் பிரசாரத்திற்கு அழைத்தால் ரஜினி மற்றும் கமலுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன் என வேலூரில் நடிகர் பிரபு கூறினார். #Rajinikanth #KamalHaasan

அரசியல் களத்திற்குள் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் வந்து விட்டனர். கமல்ஹாசன் ‘‘மக்கள் நீதி மய்யம்’’ என்ற கட்சியை தொடங்கி பொதுக்கூட்டம் நடத்தி தொண்டர்களை திரட்டி வருகிறார்.

அதேபோல், ரஜினிகாந்த் தனது கட்சி பெயரை விரைவில் அறிவிக்கிறார். இதற்காக, மாவட்டம் வாரியாக ரஜினி மக்கள் மன்றத்திற்கு புதிய நிர்வாகிகளை நியமித்து உறுப்பினர் சேர்க்கையை தீவிரமாக்கி வருகிறார்.

சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று ரஜினி பேசியது, அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் பிரபு பங்கேற்றார். ஆனால், கமலின் அரசியல் நிகழ்ச்சி எதிலும் பிரபு இதுவரை பங்கேற்கவில்லை.

இந்த நிலையில், வேலூரில் புதுப்பிக்கப்பட்ட நகைக்கடை திறப்பு விழாவில் நேற்று கலந்துக் கொண்ட நடிகர் பிரபு பேட்டி அளித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- அரசியலுக்கு வந்துள்ள ரஜினி, கமல் 2 பேருக்கும் ஆதரவு தெரிவிப்பேன்.

அரசியலில் 2 பேரையும் ஒரே சமமாக பார்க்கிறேன். தேர்தல் நேரத்தில் பிரசாரத்திற்கு அழைத்தால் 2 பேருக்கும் ஆதரவாக பிரசாரம் செய்வேன். அவர்களின் அடுத்த அறிவிப்புக்காக காத்திருக்கிறேன்.

ரஜினியும், கமலும் ஒவ்வொரு விதத்திலும் வித்தியாசமானவர்கள். 2 பேரும் அரசியலில் நல்ல முறையில் வர, அப்பாவையும் கடவுளையும் வேண்டிக்கொள்கிறேன். நடிகர்கள் அரசியலுக்கு வருவது பாரம்பரியமான ஒன்று தான்.

சினிமா துறையில் இருந்து கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை போல ரஜினியும், கமலும் அரசியலுக்கு வந்துள்ளனர். இதில் ஒன்றும் தவறில்லை. என்னுடைய தந்தையை வாழ வைத்தது, வேலூர் தான். என் அப்பாவின் மீது வைத்துள்ள பாசத்தில் தான் இவ்வளவு ரசிகர்கள் என்னை பார்க்க வந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com