‘விஸ்வரூபம்-2’ படத்திற்கு தடை கோரி வழக்கு

viswaroopam2

நடிகர் கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகவிருக்கிறது. இதன் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. கமல் அரசியல் கட்சி ஆரம்பித்த பின் வெளியாகும் முதல் படம் என்பதால் அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழக மக்களிடமும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இப்படத்திற்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பிரமிட் சாய்மீரா என்ற நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

‘மர்மயோகி’ என்ற திரைப்படத்தை இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் ரூ.100 கோடி செலவில் தயாரிக்க, கடந்த 2008-ம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் பங்குதாரராக உள்ள ராஜ்கமல் நிறுவனத்துடன் எங்கள் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பதுடன், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கித் தர சம்மதம் தெரிவித்து இருந்தார். இதற்கு முன்பணமாக ரூ.4 கோடி கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது.ஆனால், அந்த பணத்தை கொண்டு, மர்மயோகி படத்தை எடுக்கும் வேலைகள் எதையும் செய்யாமல், ‘உன்னைப்போல் ஒருவன்’ என்ற திரைப்படத்தை எடுத்தார்.

இதுதொடர்பாக கடந்த 2011-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், கமல்ஹாசன் தற்போது ‘விஸ்வரூபம்-2’ என்ற படத்தை தயாரித்து நடித்துள்ள வருகிற 10-ந் தேதி வெளியிடப்போவதாக தகவல் வெளியாக உள்ளது.

எனவே, மர்மயோகி படத்துக்காக எங்களிடம் வாங்கிய ரூ.4 கோடியை, வட்டியுடன் சேர்த்து ரூ.5.44 கோடி வழங்க கமல்ஹாசனுக்கு உத்தரவிட வேண்டும். அதுவரை, விஸ்வரூபம்-2 படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும். எனவே, விஸ்வரூபம்-2 படத்துக்கு தடை விதிக்க வேண்டும்.” என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி கார்த்திகேயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கிற்கு பதில் அளிக்க கமல்ஹாசன் உள்பட பலருக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கின் விசாரணையை 6-ந் தேதிக்கு (திங்கட்கிழமை) தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன