சினிமா ஸ்டூடியோவை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி

tamilnadu-cm-edappadi-palanisamy

தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத் தலைவர் ஆர்.கே.செல்வமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “தி.மு.க ஆட்சியில் திரைப்படத்துறைக்காக சென்னை ஓ.எம்.ஆர். சாலை பையனூரில் அரசு சார்பில் 100 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. அதில் நவீன வசதிகளுடன் கூடிய மிகப்பெரிய ஸ்டூடியோ உருவாக்கப்பட்டு வருகிறது. பற்பல சிறப்பம்சங்களுடன் உருவாகி வரும் இந்த ஸ்டூடியோ இந்தியாவிலேயே மிகப்பெரிய ஸ்டூடியோக்களுள் ஒன்றாக இருக்கும். இந்த ஸ்டூடியோ திறக்கப்பட்டால் வெளியூர்களுக்குச் சென்று செட்டுகள் போட்டு நேரம் மற்றும் பணம் விரயமாவது குறைக்கப்படும். திரைப்பட தொழிலாளர்கள் மற்றும் கலைஞர்கள் சார்பில் கட்டப்பட்ட இந்த எம்ஜிஆர் நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்திற்கான திறப்பு விழா வருகிற 26-ந்தேதி காலை 10 மணிக்கு நடக்கவிருக்கிறது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு ஸ்டூடியோவை திறந்து வைக்கிறார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் இதில் கலந்து கொள்கிறார்கள். திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத் தலைவர் ஆர்.கே.செல்வ மணி, தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால், நடிகர்கள் சங்கத் தலைவர் நாசர், இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் விக்ரமன், ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் தலைவர் பி.சி.ஸ்ரீராம், இசையமைப்பாளர்கள் சங்கத் தலைவர் தினா, திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணி, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் சுரேஷ், இயக்குநர் பாரதிராஜா, இசையமைப்பாளர் இளைய ராஜா, நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்” என்று கூறினார்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன