மிரட்டலுக்கு பயந்தவன் நான் அல்ல! – எஸ்.ஏ.சந்திரசேகரன்

sa-chandrasekar

சமூக போராளி டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகும் படம் ‘டிராஃபிக் ராமசாமி’. அறிமுக இளம் இயக்குநர் விக்கி இயக்கும் இப்படத்தில் டிராஃபிக் ராமசாமி வேடத்தில் பிரபல இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் நடித்திருக்கிறார்.

விரைவில் வெளியாக இருக்கும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீஸர் திரையீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகரன், ”இந்த படத்தை இயக்கியுள்ள விக்கி என்னைப் பற்றியோ என் படங்கள் பற்றியோ எதுவுமே தெரியாமல் என்னிடம் வந்து சேர்ந்தார்.

ஒரு கட்டத்தில் நான் இனி படம் எதுவும் இயக்கப் போவதில்லை, என்று கூறி என்னிடம் இருந்த ஐந்தாறு உதவி இயக்குநர்களை எல்லாம் வெளியே அனுப்பி விட்டேன். ஆனால், விக்கி மட்டும் போகாமல் எனக்கு உங்கள் கூட இருந்தால் போதும் சம்பளமே வேண்டாம், என்று கூடவே இருந்தார். ஒரு நாள் அவர் என்னிடம் ஒரு புத்தகத்தை கொடுத்துப் படிக்கச் சொன்னார். அது டிராஃபிக் ராமசாமியின் ‘ஒன் மேன் ஆர்மி’ என்கிற வாழ்க்கை கதை. படித்தேன். அதைப் படமாக எடுக்கலாம் என்று விக்கி கூறிய போது என்னால் மறுக்க முடியவில்லை.

கதையைப் படித்து முடித்த போது அவரும் என்னைப் போலவே சமூக அநியாயம் கண்டு பொங்குகிற மனிதராக இருந்தது புரிந்தது. தவறு நடந்தால் கோபப்படுவேன் என்ற அவரது குணம் எனக்குப் பிடித்தது. அவரை வெறும் போஸ்டர் கிழிப்பவராக நினைத்திருந்த எனக்கு அவர் பெரிய போராளியாகத் தெரிந்தார். அவர் வாழ்க்கையில் தான் எவ்வளவு போராட்ட அனுபவங்கள் என வியந்து போனேன்.

நான் 45 ஆண்டுகளில் 69 படங்கள் இயக்கி விட்டேன். நான் விட்டுச் செல்லும் பெருமையான அடையாளமாக என்ன செய்திருக்கிறோம்? என யோசித்த போது, இப்படத்தை அப்படி ஒரு அடையாளமாக எடுக்க நினைத்தேன். நாங்கள் எதிர்பாரத வகையில் பல நல்ல உள்ளங்கள் இதில் இணைந்தார்கள். எனக்கு ஜோடியாக ரோகிணி இணைந்தார். கதாநாயகன் போன்ற வேடத்தில் ஆர்.கே.சுரேஷ் வந்தார். ஒரே காட்சி என்றாலும் நடிக்க ஒப்புக்கொண்ட விஜய் ஆண்டனியை மறக்க முடியாது. இப்படியே குஷ்பூ, சீமான் எல்லாம் படத்துக்குள் வந்தார்கள். சில காட்சிகளுக்கு பிரகாஷ்ராஜ் ஒப்புக்கொண்டார். இப்படியே பலரும் படத்துக்குள் வந்து பலம் சேர்த்துள்ளனர்.

டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையின் சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட இப்படம் சர்ச்சைகள் கொண்ட கதைதான் என்பதை மறுப்பதற்கில்லை. இது பற்றி எந்த மிரட்டல் வந்தாலும் பயமில்லை. ஏனென்றால், என் முதல் படம் ‘சட்டம் ஒரு இருட்டறை’ படத்திலேயே மிரட்டல்களைப் பார்த்தவன் நான்.” என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், நடிகர் ஆர்.கே.சுரேஷ், நடிகைகள் ரோகிணி, உபாசனா, இயக்குநர் விக்கி, ஒளிப்பதிவாளர் குகன் ஆகியோரும் கலந்துக்கொண்டு பேசினார்கள்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *