கலைஞர் கருணாநிதி மறைவு – சினிமா பிரபலங்கள் இரங்கல்

kalaignar-karunanidhi

திமுக வின் தலைவரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான கலைஞர் திரு.மு.கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 28 ஆம் தேதி முதல் சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். முதலமைச்சர், துணை முதலைமைச்சர் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் இருந்து பல தலைவர்களும் தொடர்ந்து காவேரி மருத்துவமனைக்கு வந்து கலைஞரின் உடல்நலம் குறித்து விசாரித்து வந்தனர். அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாது திரைத் துறையினரும் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.

11 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை மாலை அவரது உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டது. இதனையடுத்து காவேரி மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கருணாநிதியின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், உடல் உறுப்புகள் செயலிழந்து வருவதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அறிவித்தது. இதனையடுத்து மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை பெற்று வந்த கலைஞரின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்ததால் காவேரி மருத்துவமனையின் முன் திமுக தொண்டர்கள் குவிய ஆரம்பித்தனர்.

kalaignar3

இந்நிலையில் 11 நாட்கள் அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம்(07/08/2018) மாலை 6.10 மணிக்கு கலைஞர் கருணாநிதியின் உயில் பிரிந்தது. இச்செய்தியை கேட்டு திமுக தொண்டர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழகமும் சோகத்தில் மூழ்கியது. இதனையடுத்து கலைஞர் கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையிலிருந்து அவருடைய கோபாலபுரம் இல்லத்திலும், சி.ஐ.டி. காலணி இல்லத்திலும் உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் நேற்று காலை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டது. தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் ஏராளமான அரசியல் கட்சி தலைவர்களும், ரஜினி, கமல், அஜித், சூர்யா உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

kalaignar1

இதனையடுத்து நேற்று மாலை 4 மணியளவில் ராஜாஜி ஹாலிலிருந்து அவரது உடல் ராணுவ வண்டியில் ஏற்றப்பட்டு, லட்சக்கணக்கான மக்கள் கூட்டத்தின் நடுவே ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மெரினா கடற்கரையில் அண்ணா சமாதிக்கு அருகே அவரது உடல் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் சந்தனப்பேழையில் வைத்து நல்லடக்கம் செய்யப்பட்டது. ‘ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ, ஓய்வு கொண்டிருக்கிறான்’ என்ற வாசகம் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட சந்தனப்பேழையில் எழுதப்பட்டிருந்தது.

kalaignar5

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன