காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததன் பின்னணியில் அரசியல் உள்ளது – கமல்ஹாசன்

kamal2

இந்திய தொழில் வர்த்தக சபை சம்மேளனங்களின் கூட்டமைப்பின் தேசிய செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் ராஷிஸ் ஷா தலைமை தாங்கினார். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசியதாவது:-

தமிழகம் கடந்த 15 ஆண்டுகளாக ஆரோக்கியமாக இல்லை. குறிப்பாக கடனில் தத்தளித்து வருகிறது. நான் அதிகாரத்திற்கு வந்தால் தொழில் வளம் மேம்படுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதுடன், தொழில் அதிபர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும், தேவைகளை பூர்த்தி செய்யும் நடவடிக்கைகளை கருத்தில் கொள்வேன்.

தமிழகத்தில் சிறுதொழில்கள் வளர்ச்சி பெற ஊக்கம் அளிக்கப்பட வேண்டும். அரசு அறிக்கையின் படி அதிக பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள். இவர்களுக்கு வேலை அளிப்பதற்காக அதிக வேலைவாய்ப்புகளை கொண்ட சிறுதொழில்களை ஊக்குவிக்க வேண்டும்.

சிறு தொழில் முனைவோர்கள் தான் தமிழகத்தின் ஜீவாதாரமாகும். அவர்களை ஊக்குவிப்பதன் மூலம் தொழில் வளர்ச்சியை பெற முடியும். காவிரி பிரச்சினையில் அரசியல் விளையாடுவதால் தான் அதற்கு தீர்வு ஏற்படவில்லை. அரசியலுக்காக காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. 2 மாநில விவசாயிகளிடம் இப்பிரச்சினையை கொடுத்துவிட்டால் உடனடியாக தீர்வு ஏற்பட்டு விடும்.

காவிரி பிரச்சினைக்கு எளிதில் தீர்வு காணவும் முடியும். மத்தியில் கூட்டாட்சி தான் வேண்டும். மாநிலத்தின் உரிமைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதால் மாநில உரிமைகளைப் பாதுகாக்க கூட்டாட்சி தேவைப்படுகிறது.

அரசியலில் வென்றாலும், தோற்றாலும் அரசியலில் நீடிப்பேன். வெற்றி பெற்றுதான் ஆக வேண்டும் என்பதற்காக மட்டுமே அரசியலுக்கு நான் வரவில்லை. பொறியியல் படித்தவர்கள் கூட பஞ்சாயத்து தலைவர்களாக ஆகிவிடுகின்றனர். வேலை அளிப்பவர்களின் தேவைக்கு ஏற்ப இளைஞர்களுக்கு தொழில் திறன்களை மேம்படுத்த முயற்சிக்க வேண்டும். இதுவரை சினிமா துறையில் உழைத்து பல்வேறு சாதனைகள் படைத்து விட்டேன். இனி மீதம் உள்ள காலத்தில் பொதுமக்களுக்கு சேவை செய்வது தான் என்னுடைய வாழ்க்கையாக அமையும்.

தமிழகத்தில் நீர்நிலைகளை, நாம் ஒழுங்காக பராமரித்தாலே நீர் பற்றாக்குறை ஏற்படாது. பிறமாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் போதிய மழை பெய்கிறது. ஆனால் அவற்றை சேமித்து வைக்கும் திறன் நம்மிடம் இல்லை. குறிப்பாக சென்னையில் உள்ள 2 ஆறுகளையும் சாக்கடைகளாக மாற்றி வைத்து இருக்கிறோம். மழை நீரின் முக்கியத்துவம் அறிந்து அதனை சேமிக்க கற்றுக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக்கடைகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்துக்கு பதிலாக கல்வி நிறுவனங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *