தலைவர்களை உருவாக்க விரும்புகிறேன் – கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் அரசியல் கட்சியின் பிரச்சார பாடல்களாக ‘இது நம்மவர் படை’ என்ற தலைப்பில் பாடல்கள் தொகுப்பு நேற்று வெளியிடப்பட்டுள்ளது. நடிகரும் பாடலாசிரியமான சினேகன் எழுதியிருக்கும் இந்த பாடல்களுக்கு தாஜ்நூர் இசையமைத்துள்ளார்.

சென்னை காமராஜர் அரங்கில் நேற்று நடைபெற்ற இந்த பாடல் வெளியீட்டு விழாவில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் தலைவர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு பாடல்கள் குறுந்தகடை வெளியிட்டார். கட்சியின் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், “நம்மவர் என்பது உங்களையும், என்னையும் குறிக்கும். வரும் காலங்களில் மாலைகளையும், பொன்னாடைகளையும் நாம் தவிர்க்க வேண்டும். மாற்றத்தை நோக்கி நகர்கிறோம் என்பதற்கான சமிக்ஞையாக அது இருக்கும். வருகிற வழியில் சில பேனர்களைப் பார்த்தேன். நமது சாலைகளில் பேனர்கள் வைப்பது மக்களுக்கு இடையூறாக அமைந்துவிடக் கூடும். எனவே அவற்றை உடனடியாக எடுக்கவும் சொல்லி இருக்கிறேன். பின்னர் தான் அவையாவும் முறையாக அனுமதி வாங்கி சட்டத்தின் படி வைக்கப்பட்ட பேனர்கள் எனத் தெரிய வந்தது. இருந்தாலும், ஒட்டுகின்ற போஸ்டர்கள் மூலமாக எங்களை உங்களுக்கு தெரியக்கூடாது, எங்களின் செயல்பாடுகளின் மூலமாகவே உங்களுக்கு நாங்கள் தெரியவேண்டும் என விரும்புகிறேன்.

ஒற்றை நூலைக்கூட (பூணூல்) எனது பெற்றோர்களிடம் வேண்டாம் என்று சொன்னவன், ஆனால் இங்கு வந்த காந்தியவாதி கருப்பையா அணிவித்த கற்றை நூலை பெருமையுடன் அணிந்து கொள்கிறேன். காரணம், இந்த கதர் நூல் தான் வெள்ளையனை பொட்டலம் கட்டி அனுப்பியது. தனித்தனியாக கிடந்த இந்தியாவை தைக்க உதவிய நூல் அது.

மக்கள் மகாத்மாக்களை பாராளுமன்றத்தில் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த பழைய கிணற்றில் தவளைகள் தான் இருக்கின்றது. உங்கள் தெருக்களில், உங்களைச் சுற்றித் தேடுங்கள் மகாத்மா கிடைப்பார். அப்படி தனித்தனியாக இருக்கிற அவர்கள் எல்லோருமே மக்கள் நீதி மய்யம் தான். காரணம், நாங்கள் தொண்டர்களை உருவாக்க விரும்பவில்லை, தலைவர்களை உருவாக்க ஆசைப்படுகிறோம்.

இந்த தமிழகத்தின் கறை என்பது இன்றோ, நேற்றோ உண்டானதில்லை. அது அரை நூற்றாண்டு காலமாக உண்டாக்கப்பட்ட கறை. அவை அனைத்தையும் துடைத்தெறியவே மக்கள் நீதி மய்யம் இருக்கிறது. அதைத் தாண்டி மேலும் 50 ஆண்டுகள் மக்கள் நீதி மய்யம் நிலைத்திருக்கும். ஏனெனில் அதற்கான விதை நாம் அனைவரும் சேர்ந்து போட்டது.” என்று தெரிவித்தார்.

இது நம்மவர் படை பாடல்களின் முதல் வரி

1. படை படை படை

2. தமிழ்நாட்டு தலையெழுத்தே

3. மய்யம் மக்கள் நீதி மய்யம்

4. ஆளவந்தான் ஆளப்போறான்

5. எனக்குள் ஒருவன்

6. நாட்டு நடப்பு சரியில்லடா

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com