சபாஷ் நாயுடு படத்தின் டைட்டில் குறித்து கமல் விளக்கம்

kamal2

நடிகர் கமல்ஹாசன் ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

கே:- ரசிகர்கள் சினிமாவையும் அரசியலாகப் பார்ப்பது குறித்து?

ப:- அண்ணாவின் ‘வேலைக்காரி’யில இருந்து, கலைஞரின் ‘பராசக்தி’யில இருந்து அப்படித்தானே. இப்போது இன்னும் அதிகமாகியிருக்கு. அது எனக்குப் பிடித்திருக்கிறது. எல்லாரும் கேள்வி கேட்கறாங்க. இந்த ‘எல்லாரும் விழித் திருத்தல்’தான் நான் எதிர்பார்த்தது.

கே:- விஸ்வரூபம் 2 டிரெய்லர்ல தமிழ்ல வசனம் மாற்றியது எதிர்ப்புகளைத் தவிர்க்கவா?

ப:- அப்படியெல்லாம் இல்லை. படம் பார்த்தா உங்களுக்குப் புரியும். தவிரவும் நம்ம வாக்கியத்தொடர் வேற. இந்தியில் வேற. அதுக்காகச் சில வசனங்கள் மாறலாம். அதுபோக டிரெய்லர்ல மிகக்குறைந்த நேரம்தானே. அதையெல்லாம் பெரிசு படுத்துவாங்கனு நினைக்கவில்லை. சோஷியல் மீடியா காலமில்லையா; அதான் சர்ச்சை ஆயிடுச்சு. ஆனால், நான் இதைவிட காட்டமாக அரசியல் பேசியிருக்கிறேன்; எழுதியும் இருக்கிறேன்.

கே:- சபாஷ் நாயுடு எந்த நிலையில் இருக்கு? ‘சாதியில்லாமல் என் குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தேன்’ என்று சொல்லும் உங்கள் படத்தின் டைட்டிலில் சாதிப்பெயர் இருக்கே?”

ப:- 40 சதவீதம் முடிஞ்சது. டைட்டிலை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. எம்.ஆர்.ராதா சாதிக்கெதிரா அத்தனை பேசினவர். ஆனால் சாதிப் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு தான் வசனமே வைப்பார். பேர் வெச்சதாலேயே அதைக் கொண்டாடறதா அர்த்தமில்லை.

கே:- உங்க அரசியல் வருகை எப்படி திடீர்னு நடந்தது?”

ப:- எனக்கு சினிமா தான் எல்லாம்னு நினைச்சுட்டிருந்தேன். நான் சினிமாவில் நினைச்சதெல்லாம் செய்ய முடியலைங்கறது உண்மை. ஏன்னு யோசிச்சேன். அஸ்திவாரமே சரியா போடாம, சிகையலங்காரம் பண்ணிட்டிருக்கோம்னு தோணிச்சு. நான் அரசியலுக்கு வர்றது ‘ஹேராம்’லயே ஆரம்பிச்சது. ஆபத்து வருது, ஆபத்து வருதுன்னு ஒரு கட்டியம் கூறுதல் அதுல நடந்திருக்கும். அதுதான் இப்ப நடந்துட்டிருக்கு. நாடெங்கிலும் ஸ்ரீராம் அய்யங்கர்கள் உலவிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் எத்தனையோ சாகேத்ராம்கள் விழுந்து கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன