நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் எந்த தவறும் இல்லை- கே.ஆர்.விஜயா

k-r-vijaya

சேலம் ஊத்துமலை முருகன் கோவிலில் சரணம் பல்லவி என்ற படப்பிடிப்பு தொடக்க விழா இன்று பூஜையுடன் தொடங்கியது.

இதில் கதாநாயகனாக சேலத்தை சேர்ந்த ரிஸ்வான், கதாநாயகியாக பிரியங்கா ஆகியோர் நடிக்கிறார்கள்.

இந்த படத்தை சேலத்தை சேர்ந்த சாய் இளவரசன் இயக்குகிறார். இதில் வில்லனுடைய அக்காவாக பழம்பெரும் நடிகை கே.ஆர். விஜயா நடிக்கிறார்.

மேலும் திருமணம் செய்யாமல், மக்களுக்கு சேவை செய்யும் வேடத்திலும், காதல் ஜோடியை சேர்த்து வைக்கும் முக்கிய கேரக்டரிலும் நடிக்கிறார்.

மொத்தம் 40 நாட்கள் சேலம், ஏற்காடு, ஊத்துமலை முருகன் கோவில் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது. இதில் 4 பாடல்கள், 4 சண்டை காட்சிகள் இடம் பெறுகின்றன.

இன்று ஊத்துமலை முருகன் கோவிலில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட கே.ஆர்.விஜயா நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த படத்தின் கதை வித்தியாசமாக இருப்பதால் நான் நடிக்கிறேன். உங்களுடைய ஆசீர்வாதத்தால் படம் வெற்றி பெறும். முன்பை விட தற்போது எல்லோருடைய வாழ்க்கையும் வித்தியாசமாக செல்கிறது. எல்லாமே வேகமாக உள்ளது. முன்பெல்லாம் ஒரு படத்தில் சில காட்சிகள் மட்டும் டப்பிங் எடுக்கப்படும். தற்போது படம் முழுவதுமாக டப்பிங்கில் எடுக்கப்படுகிறது.

மேலும் பல நல்ல நடிகர்கள் சினிமாவுக்கு வரவேண்டும். சினிமா என்பது கடல் மாதிரி. இதனை நம்பி நிறைய பேர் பிழைத்து வருகிறார்கள். நடிகை சாவித்திரி கதையை படமாக எடுத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.

சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர். ஆகியோர் சினிமாவுக்கு வந்து தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளனர். அவர்கள் கலைக்கூடம். அவர்கள் ஏராளமான அறிவுரைகளை சொல்லி இருக்கின்றனர்.

முன்பு போல் படக்கதைகள் வருவதில்லை. தற்போது வேறுவிதமான படக்கதைகள் வருகிறது. ஆனால், நான் கடைசி மூச்சு வரை தொடர்ந்து நடிப்பேன். குஷ்பு, சிம்ரன், விஜய், சூர்யா என ஒவ்வொருவருக்கும் தனி திறமைகள் உண்டு.

நான் எந்த நடிகருக்கும் அறிவுரை சொல்லும் நிலையில் இல்லை. நடிகர், நடிகைகள் கிசுகிசு பற்றி எனக்கு நம்பிக்கை இல்லை. ஏனென்றால் நானே செத்து போனதாக கிசுகிசுக்கள் வெளியானது. அதையும் தாண்டி நான் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

அரசியல் பற்றி எனக்கு தெரியாது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் அரசியலுக்கு வந்து ஏழை மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளனர். தற்போது நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் எந்த தவறும் இல்லை. எல்லோருக்கும் அரசியலில் வர உரிமை இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *