வெறும் பொம்மையாக வந்து செல்லமுடியாது – மனிஷா யாதவ்

ஒரு குப்பை கதை படம் மூலம் தன்னுடைய நடிப்பால் அனைவரையும் கவர்ந்து தன்னை நிரூபித்துவிட்டார் மனீஷா. அவரிடம் பேசியதில் இருந்து…

இவ்வளவு அழகாக தமிழ் பேசுகிறீர்களே?

அதுதான் ஆறு, ஏழு வருடங்கள் ஆகிவிட்டதே? நான் முன்பே பேசுவேன். ஆனால் முழுமையாக தவறே இல்லாமல் பேச ஆசைப்பட்டேன். இப்போது அந்த நம்பிக்கை ஏற்பட்டதால் தமிழில் பேசுகிறேன்.

திருமணத்துக்கு பின் தவறான வழிக்கு செல்லும் பெண்ணாக நடிக்க எப்படி ஒப்புக்கொண்டீர்கள்?

ஒரு பெண் முதல் பாதியில் ஒரு கதாநாயகனுடன் ஆடிப்பாடி விட்டு இரண்டாம் பாதியில் இன்னொருவருடன் ஆடிப்பாடினால் இந்த கேள்வி வந்து இருக்காது. படத்தில் எந்த இடத்திலும் ஆபாசமோ, விரசமோ இல்லை. அனைவரும் பார்க்கலாம் என்று தணிக்கையில் சான்று பெற்ற படம் தானே? நடிக்க வாய்ப்புள்ள ஒரு வேடத்தை இமேஜ் பார்த்து ஏன் விட வேண்டும்? இதுபோன்ற சம்பவங்கள் நாட்டில் நடப்பது தானே? நான் ஒரு சாதாரண பெண்ணை திரையில் பிரதிபலித்து இருக்கிறேன்.

நீங்கள் நடிக்கும் படங்கள் பெயர் எடுக்கின்றன. ஆனால் அதிக படங்களில் நடிக்கவில்லையே?

என் மனதுக்கு திருப்தி தராத கதைகளில் நடிக்க நான் விரும்புவதில்லை. படத்தில் வெறும் பொம்மையாக வந்து செல்லமுடியாது. என்னுடைய கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும். நிறைய படங்களை என் பிடிவாதத்தால் இழந்துள்ளேன். கதையும் கதாபாத்திரமும் தான் எனக்கு முக்கியம்.

7 ஆண்டுகால காதலை எப்படி ரகசியமாவே பாதுகாத்தீர்கள்?

அவர் என்னுடைய பள்ளி காலத்திலேருந்தே நண்பர். இவருடன் தான் நம் வாழ்க்கை அமையவேண்டும் என்பது சின்ன வயதில் இருந்தே உறுதியாக இருந்தேன். இப்போது கூட எனக்கு முழு ஆதரவாகவும் பக்கபலமாகவும் இருக்கிறார். என்னை பின்னால் இருந்து இயக்கும் சக்தி அவர்.

தோழிகள், பார்ட்டி என்று உங்களை பார்க்க முடியவில்லையே?

வேலை முடிந்ததும் முதல் வேலையாக அடுத்ததாக இருக்கும் விமானத்தை பிடித்து பெங்களூரு வந்துவிடுவேன். சினிமாவில் எனக்கு தோழிகள் உண்டு. ஆனால் யாரிடமும் நெருங்கி பழகியதில்லை.

அடுத்தடுத்த படங்களுக்கான கதைகளை கேட்டு வருகிறேன். விரைவில் அறிவிப்பு வரும் என்றார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com