வடிவேலுவிடம் நஷ்ட ஈடு கேட்கும் படக்குழுவினர்

tamil-actor-vadivelu-62

200 படங்களுக்கு மேல் நடித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சிரிக்க வைத்த நகைச்சுவை நடிகர் வடிவேலுவை வைத்து இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை இம்சை அரசன் 24-ம் புலிகேசி என்ற பெயரில் படமாக்க இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டார். இதற்காக சென்னையில் ரூ.6 கோடி செலவில் சரித்திர கால அரங்குகள் அமைத்து இயக்குனர் சிம்புதேவன் படப்பிடிப்பை தொடங்கினார்.

இதில் 10 நாட்கள் நடித்த வடிவேலு இயக்குனருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு படத்தில் இருந்து விலகினார். வடிவேலு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது. நடிகர் சங்கம் வடிவேலுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டது. இதற்கு பதில் அளித்த வடிவேலு பட வேலைகளை தொடங்குவதில் தாமதம் செய்ததால் தனக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டு மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் தொடர்ந்து இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க இயலாது என்றும் பதில் அளித்தார்.

இதனால் ஒரு வருடத்துக்கும் மேலாக படப்பிடிப்பு முடங்கி உள்ளது. படத்துக்காக போடப்பட்ட அரங்குகளும் பிரிக்கப்பட்டு விட்டன. தயாரிப்பாளர்கள் சங்கமும் நடிகர் சங்கமும் பல கட்டங்களாக சமரச முயற்சி மேற்கொண்டும் வடிவேலு பிடிவாதமாக அந்த படத்தில் நடிக்க மறுத்து வருகிறார். முதல் பாகத்திலும் வடிவேலுவே நடித்துள்ளதால் வேறு நகைச்சுவை நடிகரை வைத்து படத்தை தொடங்க முடியாத நிலைமை உள்ளது.

இதனால் படத்தை நிறுத்தி விடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. வடிவேலுவிடம் ரூ.9 கோடி நஷ்ட ஈடு பெற்று தரும்படி படக்குழுவினர் தயாரிப்பாளர்கள் சங்கத்தை அணுகி உள்ளனர். இந்த பிரச்சினையில் விரைவில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க தயாரிப்பாளர்கள் சங்கம் தயாராகி வருகிறது. வடிவேலுக்கு நடிக்க தடை விதித்தாலோ அபராதம் விதித்தாலோ அதை எதிர்த்து அவர் கோர்ட்டுக்கு செல்ல முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *