நடிகர் – நடிகைகளுக்கு கட்டுப்பாடு விதித்த நடிகர் சங்கம்

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த காலங்களில் திரையுலகில் திரைப்பட விழாக்கள், விருது வழங்கும் நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என பல நிகழ்வுகள் நடந்துள்ளன. அந்த நிகழ்ச்சிகளில் நடிகர்-நடிகைகள் பலரும் கலந்துகொண்டுள்ளனர். ஆனால், சமீப காலங்களில், அது வியாபார நோக்கத்தில் நடத்தப்படுவதால், அந்த பயனை நடிகர்-நடிகைகளும் பெறவேண்டும் என்ற நோக்கத்தில், நடிகர் சங்கத்தின் சிறப்பு கூட்டத்தில், இதுபற்றி விவாதித்து முடிவு எடுக்கப்பட்டது.

அன்று எடுத்த முடிவில் இனிமேல் இதுபோன்ற விழாக்களில் கலந்து கொள்ளும் நடிகர்கள், இலவசமாகவோ அல்லது மரியாதைக்காகவோ கலந்துகொள்ள வேண்டாம். ஒன்று, அவர்கள் பணம் பெற்றுக்கொண்டு கலந்துகொள்ள வேண்டும். அல்லது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அறக்கட்டளைக்கு பயன்படும் வகையில் பணம் கிடைப்பதை உறுதி செய்த பின், அந்த விழாவில் கலந்து கொள்ளலாம்.

இந்த பணம் பல நலிந்த கலைஞர்களுக்கு உதவி செய்வதற்காகவே பயன்படும் என்பதாக ஒரு முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு பின் நடந்த தனியார் விழாக்களில் இந்த நடைமுறையில் பணம் பெற்று, கலைஞர்களும் கலந்துகொண்டார்கள். இதன் தொடர்ச்சியாக ஐதராபாத்தில் நடந்த ஒரு ஆங்கில பத்திரிகை விருது வழங்கும் நிகழ்ச்சிக்காகவும், அந்த நிறுவனத்திடம் அன்பளிப்பு தொகை பேசப்பட்டது. அதற்கு இன்று வரையிலும் எந்த பதிலும் வரவில்லை.

இதை, நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நடிகர்-நடிகைகளிடம் தெரிவித்தோம். அதில் பல நடிகர்-நடிகைகள் எங்களது வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, விழாவினை தவிர்த்து இருக்கிறார்கள். சிலர் தவிர்க்க முடியாத காரணத்தினால், கலந்துகொண்டும் இருக்கிறார்கள்.

நாங்கள் அனைவரின் உணர்வுகளை மதிக்கிறோம். இனி எதிர்காலத்தில் நாம் ஒற்றுமையுடன் இருந்து இதுபோன்ற பொது நிகழ்வுகளில் கலந்துகொள்வதையும், நாம் ஒரு பொதுநோக்கோடு செயல்படுவதையும் உறுதி செய்யவேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம்.

எனவே இனிமேல், தாங்கள், தொலைக்காட்சி, விருது வழங்கும் நிகழ்ச்சி போன்ற நிகழ்வுகளாக இருந்தாலும், ஒன்று நீங்கள் பொருளாதார ரீதியில் பயன்பெறுங்கள். இல்லையேல் தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளைக்கு அந்த பொருளாதாரத்தை நீங்கள் உறுதி செய்து கொடுத்தால், அது பல நலிந்த கலைஞர்களின் வாழ்க்கையில் விளக்கு ஏற்றும் விதமாக அமையும்.

இதனை தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம். எங்கள் நலிந்த கலைஞர்களின் உணர்வுகளை மதித்து, இன்று (நேற்று) ஐதராபாத்தில் ஒரு ஆங்கில பத்திரிகையின் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ளாத நடிகர்கள் கார்த்தி, விஜய்சேதுபதி, நடிகைகள் நயன்தாரா, குஷ்பு மற்றும் அனைவருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com