அமலாபால் மீது விரைவில் குற்றப்பத்திரிகை

கேரளாவை சேர்ந்த பிரபல நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் அதிபர்கள் தங்கள் சொகுசு கார்களை புதுச்சேரியில் பதிவு செய்து அந்த கார்களை கேரளாவில் இயக்குவதாகவும், இதன் மூலம் கேரள அரசுக்கு வரி வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் புகார்கள் எழுந்தன.

கேரளாவை விட புதுச்சேரியில் வாகன பதிவிற்கு வரி குறைவு என்பதால் இதுபோன்ற செயல்கள் அதிகரித்து வருவதும் அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது. பிரபல நடிகை அமலாபால், நடிகரும் பாரதிய ஜனதா எம்.பி.யுமான சுரேஷ் கோபி, நடிகர் பகத்பாசில் ஆகியோர் மீதும் இந்த குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

இதுபற்றி கேரள குற்றப்பிரிவு போலீசார் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையின் போது அமலாபால், சுரேஷ் கோபி, பகத்பாசில் ஆகியோர் போலீசார் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தனர். அப்போது அவர்கள் தாங்கள் புதுச்சேரியில் படப் பிடிப்புகளில் பங்கேற்பதற்கு வசதியாக அங்கு தங்க வாடகைக்கு வீடு எடுத்து உள்ளதாக கூறி சில ஆவணங்களையும் ஒப்படைத்தனர்.

போலீசார் அதுபற்றி விசாரணை நடத்தியபோது அது போலி ஆவணங்கள் என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை தீவிரமடைந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து உடனடியாக ஜாமீனில் விடுவித்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளது. வரி ஏய்ப்பு செய்தது தொடர்பாக அமலாபால் உள்பட 3 பேர் மீதும் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com