மீண்டும் தமிழில் நடிக்க ஆசைப்படும் பிரியாமணி

Priyamani

திருமணத்துக்கு பிறகும் கூட ஒரு வெற்றிகரமான நடிகையாக நடித்துக்கொண்டுதான் இருக்கிறார் பிரியாமணி. ஆனால், இங்கு இல்லை தெலுங்கு, கன்னடம், இந்தியில்…

ஏன் தமிழை மறந்துவிட்டீர்களா? என்று அவரிடம் கேட்டதற்கு,

‘எப்படி மறக்க முடியும்? எனக்கு தேசிய விருது மூலம் பெரிய அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் தந்ததே தமிழ் தானே? தமிழில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் இந்த கேள்வியை நீங்கள் அங்கு இருக்கும் இயக்குனர்களிடம் தான் கேட்க வேண்டும். அவர்கள் என்னை அணுகவில்லை. நல்ல கதைக்காக காத்திருக்கிறேன். அமைந்தால் நிச்சயம் நடிப்பேன்.

தென்னிந்தியாவில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் அதிகரிக்கிறதே?

நல்ல வி‌ஷயம். இப்போதாவது நடிகைகளுக்கும் தங்களை நிரூபிக்க வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. அதற்காக கமர்ஷியல் படங்களை குறை கூறவில்லை. அதுவும் ஒரு நடிகையின் சினிமா வாழ்க்கையில் அவசியம். ஆனால் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படம் என்றால் முழு படமுமே அவர்களின் தோள்களில் தான் இருக்கிறது. எப்போதுமே சினிமாவை தாங்குவது பெண்கள் தான். இன்று அவர்கள் தங்களால் ஆக்‌‌ஷன் பண்ண முடியும், நடிக்க முடியும் என்று தங்கள் முழு திறமையை காட்ட முடிகிறது. ஹீரோயினுக்கான படம் என்றாலும் அதிலும் வித்தியாசமான கதைகள் வரவேண்டும். ஹாரர், திரில்லர் என்று மட்டுமே வந்துகொண்டிருந்தால் அவற்றால் பயன் இல்லை. இப்போது அறம் மாதிரியான வித்தியாசமான படங்களும் வரத் தொடங்கி இருக்கின்றன.

உங்களுக்கு பிறகு தமிழில் எந்த கதாநாயகியும் தேசிய விருதுக்கு செல்லவில்லையே?

பருத்தி வீரன் மாதிரியான படம் அமையவில்லை போல. இப்போது நடிகையர் திலகம் மூலம் கீர்த்தி சுரேஷ் தேசிய விருதுக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது. தேசிய விருது என்பது போட்டிகள் நிறைந்த இடம். இந்தியா முழுவதிலும் இருந்து படங்கள் வரும். எனவே சவால்கள் அதிகம்.

ஜோதிகா, சமந்தா, நீங்கள் என்று திருமணத்துக்கு பிறகும் கூட கதாநாயகியாக நடிப்பது பற்றி?

இது மிகவும் ஆரோக்கியமான ஒன்று. ஒரு நடிகைக்கு திருமணம் ஆகிவிட்டாலே அவர்கள் அக்கா, அண்ணி வேடங்களுக்கு தான் என்று ஒதுக்கி வைத்ததை நானே பார்த்திருக்கிறேன். ஆனால் இப்போது அது மாறி இருக்கிறது. இது தொடர வேண்டும்’ என்றார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *