தூத்துக்குடி வன்முறைக்கு காரணம் உளவுத்துறை – ரஜினிகாந்த்

rajinikanth2

அரசியல் அறிவிப்புக்கு பின்னர் முதல் முறையாக தூத்துக்குடிக்கு பயணம் மேற்கொண்டுள்ள ரஜினிகாந்த் ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நேரில் சந்தித்த ரஜினிகாந்த் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது ரஜினி பேசியதாவது,

ஸ்டெர்லைட் கலவரம் போன்று இந்த மாதிரியான சம்பவம் இனி நடக்கக் கூடாது. கலவரத்தின் போது பொதுச் சொத்துக்களை எரித்தது மக்கள் கிடையாது. இது சமூக விரோதிகளின் செயல், சமூக விரோதிகள் உள்ளே நுழைந்து போராட்டத்தை திசை திருப்பியிருக்கின்றனர். ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் அப்படித் தான் நடந்தது.

சமூக விரோதிகளின் இத்தகைய செயல்களை அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். அந்த விஷயத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை பாராட்டுகிறேன். அவர் சமூக விரோதிகளை அடக்கி வைத்திருந்தார். தற்போது ஆட்சியில் இருக்கும் அரசும் சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.

தொழிற்சாலையை மூட அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இனிமேல் அந்த ஆலையை திறக்க முடியாது. நீதிமன்றம் அல்லது வேறு எங்கு சென்றாலும் ஆலையை திறக்க அனுமதிக்கக் கூடாது. ஆலையை திறக்க வேண்டும் என்ற நினைப்பு கூட இருக்கக் கூடாது.

தமிழகம் போராட்டக் களமாக மாறியிருக்கிறது. தமிழகத்தில் அடிக்கடி போராட்டம் நடக்கிறது. அனைத்திற்கும் போராட்டம் என்பதும் தீர்வாகாது. போராட்டத்தில் ஈடுபடம் மக்கள் ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும். சமூக விரோதிகளின் வசம் சிக்கி விடக்கூடாது.

பொறுப்பில் இருக்கும் அரசு மக்களுக்கு தேவையானதை சரியாக செய்ய வேண்டும். ஒரு ஆலையோ அல்லது வேறு ஒன்றோ ஆரம்பிப்பதற்கு முன்பே அதைப்பற்றி முழு சோதனை நடத்திய பின்னரே ஆரம்பிக்க வேண்டும்.

தூத்துக்குடியில் அசாம்பாவிதம் நடந்தததற்கு உளவுத்துறை தான் பொறுப்பு. இது உளவுத்துறையின் தவறே.

இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு அமைத்துள்ள ஒரு நபர் விசாரணை ஆணையம் மீது நம்பிக்கையில்லை. அதேநேரத்தில் எந்த அனைத்து பிரச்சினைக்கும் ராஜினாமா செய்வது என்பது தீர்வாகாது. எல்லாத்திலும் அரசியல் பண்ணுகிறார்கள். நேரம் வரும் போது மக்கள் நியாயத்தை காட்டுவார்கள்.

எந்த இடம் என்றாலும் காவலர்கள் மேல் கைவைப்பதை ஏற்க முடியாது. காவலர்களை அடித்தவர்களை சமூக விரோதிகளாக அறிவிக்க வேண்டும். அவர்களுக்கு தக்க தண்டனை வாங்கித் தர வேண்டும்.

இவ்வுளவு பெரிய சம்பவம் நடந்ததற்கு அரசின் அலட்சியம் தான் காரணம். அரசுக்கு இது பெரிய பாடமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அறிவித்துள்ளேன் என்றார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *