இன்று சென்னை திரும்புகிறார் ரஜினிகாந்த்

rajini

புதிய கட்சித் தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட போவதாக நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந்தேதி அறிவித்தார். அதன்பின்னர் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத சுமார் 50 ஆயிரம் ரசிகர் மன்றங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, “ரஜினி மக்கள் மன்றம்” என்று பெயரிடப்பட்டுள்ளது.

அதன் மூலம் தமிழகம் முழுவதும் உறுப்பினர்கள் சேர்க்கை நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் மாவட்டம் வாரியாக ரஜினி மக்கள் மன்றத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அந்த பணிகள் 95 சதவீதம் முடிந்து விட்டன. இதைத் தொடர்ந்து ரஜினி காந்த் தனது புதிய கட்சியின் பெயரை எப்போது அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இது தொடர்பாக ரஜினிகாந்த பல்வேறு தரப்பினரிடமும் ஆலோசனை நடத்தினார். கட்சிப் பெயரை அறிவிப்பதற்கு முன்பு இமயமலைக்கு யாத்திரை சென்று வர நினைத்தார். அதன்படி இமயமலைக்கு சென்று அங்கு பாபாஜி குகையில் தியானம் இருந்து விட்டு, சாதுக்களுடன் பேசி விட்டு வந்தார். பிறகு அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு இருந்தபடியே புதிய கட்சி, கொடி மற்றும் கொள்கைகள் தொடர்பாக ஆலோசித்தார். தொடர் ஆலோசனைகள் அனைத்தையும் ரஜினி நடத்தி முடித்து விட்டார்.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்றிரவு சென்னை திரும்புகிறார். அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து ரஜினியின் அரசியல் பயணம் புதிய வேகத்தை எட்டும் என்று தெரிய வந்துள்ளது.

அடுத்த வாரம் முதல் ரஜினி முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேச உள்ளார். இதற்கிடையே மன்ற நிர்வாகிகள் அனைவரையும் சென்னைக்கு வரவழைத்து பேசவும் ரஜினி திட்டமிட்டுள்ளார். நிர்வாகிகளுடனான சந்திப்பு முடிந்த பிறகு நடிகர் ரஜினிகாந்த் தனது புதிய கட்சிப் பெயர், கொடி மற்றும் கொள்கைகளை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று தெரிய வந்துள்ளது. அனேகமாக இந்த மாத இறுதியில் ரஜினியின் அரசியல் கட்சிப் பெயர் தெரிந்து விடும் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுவரை அரசியல் கட்சி தொடங்கிய பிரபலங்கள் அனைவரும் தங்களது ஆதரவாளர்களை ஒன்று திரட்டி பெரிய மாநாடு போல நடத்தி கட்சிப் பெயரை வெளியிட்டனர். நடிகர் கமல்ஹாசனும் மதுரையில் அப்படித்தான் தனது கட்சிப் பெயரை வெளியிட்டார். ஆனால் இவை அனைத்தையும் மிஞ்சும் வகையில் மிகப் பெரிய மக்கள் கூட்டத்தை கூட்டி ரஜினி தனது கட்சிப் பெயரை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *