தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு – இயக்குநர்கள் சங்கம் கண்டனம்

Tamilnadu-Directors-Council

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடைபெற்ற பேரணியின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் பலியாகினர். மேலும் பலரும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொதுமக்கள் கொல்லப்பட்டது தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தூத்துக்குடியில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் செல்போன் இணைய சேவையும் முடக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி கலவரத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்க தலைவர் விக்ரமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

‘‘தூத்துக்குடியில் நடந்த கலவரத்தில் 13 அப்பாவி மக்கள் உயிர்களை இழந்ததற்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதோடு துப்பாக்கி சூட்டிற்கு காரணமான காவல்துறையின் அராஜக செயலை வன்மையாக கண்டிக்கிறோம். தூத்துக்குடி நகர மக்கள் 20 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிடுங்கள் என்று போராடுகிறார்கள். இதுவரை அதற்கு சரியான தீர்வு இல்லை.

பேரிடர்களும், உயிரிழப்புகளும் நடக்க கூடாது என்றுதான் ஜெயலலிதா முதல்–அமைச்சராக இருந்தபோது ஆலையை மூடுவதற்கும், அந்த ஆலைக்கு வழங்கப்படும் மின் இணைப்பை துண்டிக்கவும் உத்தரவிட்டார். ஆனால் ஆலை நிர்வாகம் கோர்ட்டில் தடை உத்தரவு பெற்றது. ஆலையை நடத்த நிரந்தரமாக தடை போட்டு இருந்தால் இன்று 13 உயிர்களை இழந்து இருக்க மாட்டோம்.

இந்த பிரச்சினைக்கு உடனே தீர்வு காண ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிட வேண்டும். அதற்கான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசை இயக்குனர்கள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.’’

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *