தயாரிப்பாளர் சங்க பொறுப்பில் இருந்து தேனப்பன் விலகல்

Thenappan

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்து தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் விலகியுள்ளார். பதவியில் இருந்து விலகியதுடன் தலைவரான விஷால் மீதும் நிர்வாகம் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விஷாலுக்கு எழுதியுள்ள ராஜினாமா கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

நான் இதுவரை தமிழ் தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளராக ஒரு முறையும், துணைத் தலைவராக ஒரு முறையும், பல முறை செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளேன். இப்பொழுது இருக்கும் நிர்வாகத்தில் எதிர்க்கட்சி அணியிலிருந்து செயற்குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வெகு சில உறுப்பினர்களில் நானும் ஒருவன்.

இதுவரை என்னால் முடிந்த அளவிற்கு இந்த நிர்வாகத்திற்கு என்னுடைய ஒத்துழைப்பை அளிக்கத் தவறியதில்லை. இப்போது நான் தற்போதைய நிர்வாகத்தின் கீழ் செயற்குழு உறுப்பினராகத் தொடர விரும்பாததால் அப்பதவியை ராஜினாமா செய்ய முடி வெடுத்துள்ளேன்.

முதலில் தி.நகர் அலுவலகம் தனியாக அமைக்கப்பட்டு அதற்கு தனியாக ஊழியர்களை நியமித்து பெரும் பண விரயம் செய்யப்படுவதில் எனக்கு உடன் பாடில்லை.

சில மூத்த வயதான தயாரிப்பாளர்களுக்கான பென்சன் பணத்தை தராமல் நிறுத்தி அவர்களை கஷ்டப்படுத்துகிறார்கள்.

சமீபத்தில் நடந்த வேலை நிறுத்தத்தின்போது சிலருக்கு மட்டும் சலுகைகள் வழங்கப்பட்டு அவர்கள் மேல் ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படாததில் எனக்கு உடன்பாடில்லை.

செயற்குழுவின் ஒப்புதல் இல்லாமலேயே இன்சூரன்ஸ் காப்பீட்டுத் தொகை 4 லட்சத்திலிருந்து 2 லட்சமாக குறைக்கப்பட்டதில் எனக்கு உடன்பாடில்லை.

வேலை நிறுத்தம் எந்தக் காரணத்திற்காக நடத்தப்பட்டதோ அவை நிறைவேறாமலேயே வேலை நிறுத்தம் தன்னிச்சையாக வாபஸ் பெறப்பட்டு 48 நாட்கள் தேவையில்லாமல் தயாரிப்பாளர்களுக்கு கடும் நஷ்டம் ஏற்படுத்தப்பட்டது.

வேலை நிறுத்தத்தினால் கியூப் கட்டணம் குறைக்கப்பட்டதாக சொன்னாலும் முன்பு இருந்த கட்டண முறையை மாற்றி வாரம் ரூ.5000 முறையில் வசூலிக்கப்படுகிறது. 4 வாரங்கள் ஓடும் படங்களுக்கு மொத்த கட்டண அடிப்படையில் கணக்கிடும் பொழுது, இவை முன்பு இருந்த கட்டணத்தை விடவும் அதிகம்.

நிர்வாகத்தில் அனுபவம் வாய்ந்த மூத்தத் தயாரிப்பாளர்களை ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கப்படுவதால் எனக்கு ஓட்டளித்த தயாரிப்பாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்த நிர்வாகத்தின் அங்கமாக நான் தொடர விரும்பவில்லை. எனவே என் செயற்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு எடுத்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *