டிராபிக் ராமசாமி, அக்கிரஹாரத்து ராமசாமி – கவிஞர் வைரமுத்து

சமூக ஆர்வலரான டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு ‘டிராபிக் ராமசாமி’ என்ற படம் உருவாகியுள்ளது. டிராபிக் ராமசாமி வேடத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரன் நடித்துள்ளார். அவர் மனைவியாக ரோகிணி நடித்துள்ள இந்தப் படத்தை, விக்கி இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி இருவரும் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட கவிஞர் வைரமுத்து, “எஸ்.ஏ.சந்திரசேகரனுக்கும் எனக்கும் நெருக்கமான பழக்கம் இல்லை என்றாலும், அவர் என்மேல் அன்பும், மெல்லிய மதிப்பும் வைத்திருப்பவர் என்பதற்கு காரணங்கள் இரண்டு. ஒன்று, பலரையும் அழைக்க முடியும் என்றாலும், தன் மகன் விஜய் திருமணத்தை நடத்திவைக்க வலம்புரி ஜானையும் என்னையும் மட்டுமே அழைத்தார். இரண்டாவது காரணம், இன்று இங்கே அழைத்து இருப்பது. இதிலிருந்து அவர் மனதில் நான் இருப்பதாக என் உள்மனது சொல்லியது. இந்த டிராபிக் ராமசாமி மாதிரி ஒரு கதையைப் படமாக்க சமூக அக்கறை வேண்டும். அது எஸ்.ஏ.சிக்கு இருக்கிறது. அவர் வேறு கதையைப் படமாக எடுத்திருக்கலாம். ஆனால், வியாபாரம் என்பது இரண்டாம் பட்சம். டிராபிக் ராமசாமி என்கிற நிகழ்காலத் தத்துவம் தன்னை ஈர்த்திருக்கிறது. அதில் ஒரு படமாக்கும் அளவுக்கு கச்சாப் பொருள் இருக்கிறது என்று நம்பி ஈர்க்கப்பட்டிருக்கிறார். அதைப் படமாக்க வேண்டும் என்றால் ஒரு துணிச்சல் வேண்டும். அது இவருக்கு இருக்கிறது.

அரசு எப்போதும் போராட்டங்களை ஒடுக்கவே முயல்கிறது. ஒடுக்குமுறையை விட்டுவிட்டு போராட்டங்களின் காரணங்களை அறிய வேண்டும். ஆராய வேண்டும். அன்று ஈரோட்டு ராமசாமி என்று ஒரு போராளி இருந்தார். இந்த அக்கிரகாரத்து ராமசாமியை ஒரு போராளியாகவே பார்க்கிறேன். டிராபிக் ராமசாமி போன்ற சமூக கோபம் இருப்பதால்தான் இந்த சமூகம் நம்பிக்கையோடு இருக்கிறது. இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துவது சமூகத்துக்கான பலமாகும். இப்படம் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறேன், வாழ்த்துகிறேன்” என்றார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com