காவிரி விவகாரம் – ஆளுனரிடம் திரைத்துறையினர் மனு

Vishal-and-nassar-meet-Governor

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சார்பில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது.

தமிழ் சினிமா துறையினர் சார்பில் கடந்த மாதம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே போராட்டம் நடந்தது. இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விஷால், நாசர், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட நடிகர், நடிகைகள், பெப்சி தொழிலாளர் சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்பட பலர் இதில் பங்கேற்றனர்.

போராட்டத்தின் போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தமிழ்நாட்டின் உரிமையை மீட்க வேண்டும். இதற்கு மத்திய- மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் திரை உலகினர் கையெழுத்து போட்டு இருந்தனர்.

இந்த நிலையில் தமிழ் திரைப்பட துறையினர் சார்பில் நடிகர்கள் விஷால், நாசர், இயக்குனர்கள் ஆர்.கே.செல்வமணி, பொன்வண்ணன், விக்ரமன் உள்ளிட்டோர் இன்று கவர்னர் மாளிகை சென்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தனர்.

அப்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழ் திரைப்பட துறையினர் சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கவர்னரிடம் கொடுத்தனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசிடம் வற்புறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

பின்னர் நாசர், பொன்.வண்ணன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரும் மனுவில் ரஜினி, கமல், விஜய் உள்பட திரை உலகைச் சேர்ந்த 5 ஆயிரம் பேர் கையெழுத்திட்டு இருந்தனர். அந்த மனுவை ஏற்கனவே திட்டமிட்டப்படி இன்று கவர்னரிடம் கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அவர் 2 வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மனுவின் நகல் முதல்- அமைச்சருக்கு அனுப்பப்படும் என்றும் கூறினர்.

ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்றும் வற்புறுத்தினோம். மனுவிலும் அதை குறிப்பிட்டுள்ளோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக கவர்னர் கூறினார்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *