நடிகர் விவேக்கிற்கு அதிர்ச்சியளித்த கலைஞர்

vivek-kalaignar

திமுக வின் தலைவரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான கலைஞர் திரு.மு.கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் 11 நாட்கள் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 7 ஆம் தேதி காலமானார். அரசியலிலும், கலைத்துறையிலும் பற்பல சாதனைகள் படைத்த கலைஞரின் பண்பையும், அவருடன் பழகிய தருணங்களையும் பலர் நினைவு கூர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விவேக் கலைஞருடனான நெகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இதுபற்றி விவேக் கூறுகையில், “கலைஞரை பல மேடைகளில் பாராட்டியிருக்கிறேன். இவரின் ஓய்வறியா சூரியன் என்ற வசனத்தை Sunக்கு ஏது Sunday என்று ஆங்கிலத்தில் கூறியதை கேட்டு மேடையிலேயே சிரித்தார். மேலும் ஒருமுறை பாக்யராஜ் இயக்கிய பாரிஜாதம் என்ற படத்தை பார்த்துவிட்டு அதை பாராட்டி கடிதம் ஒன்றை பிரபல பத்திரிக்கைக்கு அனுப்பியிருந்தேன். இதை பார்த்த கலைஞர் காலை 7 மணிக்கெல்லாம் போன் செய்தார்.ஆனால் நான் முதலில் இரண்டுமுறை யாரோ மிமிக்ரி செய்கிறார்கள் என்று கட் செய்துவிட்டேன். பின்பு தான் முதலமைச்சரே போன் செய்கிறார் என்று தெரிந்தது. அவர் பாராட்டிய சில மணி நேரம் கழித்து பாக்யராஜ் என் வீட்டுக்கே நேராக வந்து எனக்கு நன்றி சொல்லி பூங்கொத்து கொடுத்தார். தனக்கு கலைஞர் தான் காலை 5.30 மணிக்கே போன் செய்து இந்த விஷயத்தை சொன்னார் என்றார்.

நான் ஷாக் ஆகி இருக்கும்போதே முரசொலி பத்திரிக்கையில் அவரே மற்றொரு கலைஞரை பாராட்டிய நகைச்சுவை கலைஞர் என்று ஒரு வாழ்த்து சொல்லி எழுதியிருந்தார். இந்த அதிர்ச்சியை அனுபவிக்கும் முன்னரே அவரது வீட்டிலிருந்து மீண்டும் போன் செய்து கலைஞரை பார்க்க விரும்பினால் மாலை 5.30க்கு வாருங்கள் என்று சொன்னார்கள். நேரில் பார்க்க போன போது காவல் துறை DGP யிடம் பேசிக்கொண்டிருப்பதை நிறுத்தி அவரை அனுப்பிவிட்டு என்னிடம் பேசினார். ஒரு மாநிலத்தையே கட்டி ஆளும் ஒரு முதலமைச்சர் அத்தனை பணிகளுக்கு மத்தியில் என்னை அழைத்து வாழ்த்துவது எல்லாம் எப்படி இதெல்லாம் சாத்தியம் என்று அசந்துவிட்டேன்” என்று கூறியுள்ளார்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன