கருணாநிதி வேடத்தில் நடிக்க ஆசை – பிரகாஷ்ராஜ்

எம்.ஜி.ஆர். மற்றும் கருணாநிதி இருவருடைய வாழ்க்கையை மையமாக வைத்து மணிரத்னம் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘இருவர்’. மோகன்லால், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், தபு, கௌதமி, ரேவதி உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்த இப்படத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் கருணாநிதி வேடத்தில் நடித்திருந்தார். பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே வெளியான இப்படத்தில் பிரகாஷ்ராஜின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், “இருவர் படத்தில் நடித்த போது எனக்கு 30 வயது தான். அந்த சமயத்தில் கருணாநிதி தமிழக முதல்வராக இருந்தார். அதுவரை நான் கருணாநிதியை சந்திக்கவில்லை. கருணாநிதியின் பேச்சுகள் அடங்கிய டேப்புகளை மணிரத்னம் என்னிடம் கொடுத்தார். கருணாநிதி பற்றி நிறைய ஆய்வு செய்தேன். அவரை பற்றி படிக்கப் படிக்க எனக்கு அவரின் வாழ்க்கை மிகவும் பிடித்துவிட்டது. அவர் மீதான மரியாதையும் அன்பும் மேலும் அதிகரித்தது. அவருக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையே இருந்த நட்பு குறித்து அறிந்து அசந்து போய்விட்டேன்.

பல ஆண்டுகள் கழித்து கருணாநிதியை நேரில் சந்தித்தேன். இருவர் பிடித்திருந்ததா? கொஞ்சமாவது உங்களை போன்று நடித்தேனா? என்று நான் கருணாநிதியிடம் கேட்டேன். ஆமாம் கிட்டத்தட்ட என்று அவர் கூறினார். கல்கி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருது வாங்கிய போது அந்த அரங்கில் இருந்தவர்கள் அனைவரும் டென்‌ஷனில் இருந்தார்கள். பிரகாஷ்ராஜூக்கு இந்த விருதை கொடுப்பதில் ஆனந்தம். இது அவருக்கு தெரியும், எனக்கு தெரியும். எங்கள் இருவருக்கும் தெரியும் என்றார்.அதன் பிறகு நாங்கள் அடிக்கடி சந்தித்து பேசிக் கொண்டோம். மணிக்கணக்கில் அரசியல் பற்றி பேசுவோம். ஒன்றாக காபி குடிப்போம், வாக்கிங் போவோம். மதத்தின் பெயரால் அரசியல் செய்யாத அவரை நான் எப்பொழுதுமே மதிக்கிறேன். அவர் தமிழகத்தில் ஜனநாயக விதையை விதைத்தார். ன்னொரு கருணாநிதியை பார்ப்போமா என்பது சந்தேகமே. கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டால் அவர் கதாபாத்திரத்தில் மீண்டும் நடிக்க விரும்புகிறேன்” என்று கூறினார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com